Saturday, March 29, 2014

வைகோ என்னும் அரசியல் கோமாளி

நான் எந்தகட்சியையும் சாராதவன் என்கிற தலத்தில் இருந்தும் பலவருடங்களாக தமிழக அரசியல் களத்தை மிக உன்னிப்பாக பின்தொடருபவன் என்கிற ரீதியில் இந்த பதிவில் வைகோவை பற்றி எழுதுகிறேன். இதை இப்போது எழுதவேண்டிய கட்டாயம் ஒரு நண்பரால் ஏற்பட்டது, அவர் இங்கிலாந்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு படித்து எதையும் அறிவுபூர்வமாக அணுகக்கூடிய ஒரு பண்பாளர் ஆனால் இன்றோ வைகோ என்பவரை தலைவராக ஏற்றதால் அவர் எடுக்கும் அரசியல் நிலைபாடுகளை இணைத்தில் மிக மூர்க்கமாக ஆதரித்து எழுதுவது மட்டுமல்லாது எதிர்கருத்து கொண்டவர்களை பொத்தாம்பொதுவாக ஏசிக்கொண்டு இருப்பதால் என் நிலைப்பாட்டில் வைகோவை பற்றி எனக்கு தெரிந்தவைகளை எழுதுகிறேன். ஒரு தலைவன் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு வரவேற்பு தெரிவிப்பதும் சமூகத்திற்கு ஒவ்வாத முடிவுகளை எடுககுமபோது எதிர்த்து கேள்வி கேட்பவேனே தொண்டன், அனைத்தையும் ஆதரிப்பவன் ஒரு அடிமை.
            தமிழர்கள் ஆட்சி புரியவேண்டிய தமிழர் நிலத்தில் ஒரு வடவனை அழைத்துவந்து அவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு மற்றவர்களுக்கான இட பங்கீட்டை அறிவிக்க தங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று அவன் அறிவிப்புக்காக மேடையில் உட்கார்ந்து இருந்த காட்சியை பார்த்து இந்த கோமாளி இனி எந்த காலத்திலும் பெரியாரின் பெயரை கூட உச்சரிக்க அருகதை அற்றவர் என்கிற முடிவுக்கு வந்தேன். இவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் இவர் பின் திரண்ட ஒரு பெரும்கூட்டமும், திமுக, அதிமுகவுக்கு பிறகு அமைப்பு ரீதியாக அனைத்து ஊர்களிலும் வியாபித்த ஒரு கட்சி மதிமுக, இன்றைய தேமுதிக போல 8% ஒட்டு வங்கி வைத்திருந்த கட்சியின் இன்றைய நிலை? தன்னுடைய தனி சின்னத்தையே தக்கவைத்துகொள்ள தள்ளாடுகிறது. இவர் இப்படி போராடி சீட்டுவாங்கி வெற்றி பெற்று என்ன கிழிக்கபோகிறார் என்றால் ஒன்றுமில்லை அதற்கான உதாரணம் 1999 ஆண்டு 4 பாராளுமன்ற இடங்களை பெற்ற இவரால் என்ன செய்ய முடிந்தது? செஞ்சி ராமச்சந்திரன் அமைச்சர் ஆக்கினார் ஆனால் அவரோ ஊழல் குற்றசாட்டில் பதவி இழந்தார். இவர்கள் அமைச்சரவையில் பங்கேற்ற அந்த காலகட்டத்தில்தான் புலிகள் ஓயாத அலைகள் 3 படை நடவடிக்கையில் ஆனையிறவை கைப்பற்றி பல்லாயிரக்கணக்கான இலங்கை இராணுவ வீரர்களை சிறை பிடித்தனர் ஆனால் இவர்கள் பங்கேற்ற பாரதிய சனதா கட்சி புலிகளை மிரட்டி முன்னேறும் படைநடவடிக்கையை தடுத்தனர். அந்த காலகட்டத்தில்தான் இலங்கைக்கு அதிவிரைவு படகுகளையும், இராணுவ தளவாடங்களையும் இந்தியா கொடுத்தது.
              எந்த ஜெயலலிதாவை எதிர்த்து தமிழகத்தில் இரண்டுமுறை நடைபயணம் செய்தாரோ அவருடன் கூட்டு சேர்ந்தது முதல் கோமாளித்தனம், எந்த கட்சியால் பழிசுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்டாரோ அந்த திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது அடுத்த கோமாளித்தனம், மறுபடியும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து அவரின் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டது அடுத்த கோமாளித்தனம், இலவு காத்த கிளிபோல் காத்திருந்த போது எங்கிருந்தோ வந்த கோமாளி விஜயகாந்துக்கு நிறைய இடங்கள் ஒதுக்கியதால் அந்த தேர்தலையே புறக்கணித்தது அடுத்த கோமாளித்தனம், 2009 ஆண்டு தமிழகத்தில் எழுந்த ஈழ எழுச்சியில் முத்துக்குமார் இறப்பின் போது இப்போது இவர்கள் சேர்ந்திருக்கும் கூட்டணி இயல்பாகவே உருவாகியிருக்கும் அது ஒரு மாற்று சக்தியாக உருவாகி இருந்திருக்கும் ஆனால் காலத்தை கணிக்க தெரியமால் இவர் ஜெயலலிதாவின் பின் சென்று தெருவில் நின்ற நிலை மற்றொரு கோமாளித்தனம், எந்த அழகிரியை எதிர்த்தாரோ அவரை கட்டிபிடித்து  நின்றதை பார்த்தபோது கோமாளியை விட சந்தர்ப்பவாதியாக குட்டு வெளிப்பட்டு போனார். பேச்சிலும் செயலிலும் சிரிப்பிலும் எப்போது ஒரு நாடக தன்மை வெளிப்படும் அதை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துகொண்டார்கள், எத்தனைதான் சிறந்த மக்கள் நல போரட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும் என்றுமே வெற்றி பெறமுடியாத மற்றுமொரு திமுகவை நடத்தும் வைகோ என்னும் கோமாளி.....

       

Friday, December 13, 2013

என் அலுவல் பயணங்களில் - வரோஷ்லவ், போலாந்து- அனுபவம் 1

எப்போதும் போலவே பணிசுமை மற்றும் நேரமேலாண்மை இல்லாததாலும் இந்த பயணத்திற்கான எந்த ஆயத்தமும் இல்லாமல் விடியற்காலை 4மணி பயணத்திற்கு இரவு 12மணி வரை பயண பொதிகளை எடுத்து வைத்துகொண்டிருந்தேன். இரவு தூங்க செல்லும்முன் மகள் தன் அம்மாவிடம் பேசிகொண்டிருந்தது என் காதில் விழுந்தது, அவளும் அவளுடைய பள்ளி பேருந்தில் வரும் தோழியும் பேசிக்கொண்டார்களாம் என்னைபோலவே அந்த குழந்தையின் அப்பாவும் அலுவல் நிமித்தமாக வெளிநாடு செல்கிறாராம் இருவரும் தத்தமது அப்பாவை மிஸ் செய்வோம் என்று பேசிக்கொண்டார்களாம், இதை கேட்டுக்கொண்டிருந்த நான் சிந்தனை வயப்பட்ட இவளை இனி குழந்தை என்று எண்ணமுடியாத ஏக்கம் மேலிட்டது.

             விடியற்காலையில் ஆழ்ந்து உறங்கிகொண்டிருந்த மகளும் மனைவியும் விழிக்ககூடாதே என்ற கவலையில் இறகுபோல பறந்துகொண்டிருந்தேன், படுக்கை அறையில் ஏதோ எடுக்க சென்ற என்னை மகள் விழித்துக்கொண்டு என்னை அணைத்து "குட் லக் ப்பா" என்று ஒரு சூட்டு முத்தத்தை கொண்டுதுவிட்டு திரும்பவும் படுத்துகொண்டாள். நல் ஒழுக்கம் கொண்ட இந்த ஆறு வயது குழந்தையின் ஆசிர்வதிக்கப்பட்ட தந்தையாக அந்த அதிகாலையில் பூத்துபோனேன்.

             போலந்தில் நான் போய் இறங்கும் விமானநிலையத்திலிருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் நிறுவனத்திற்கு செல்லவேண்டும் மனைவி இரண்டு நாட்களாகவே எச்சரித்து கொண்டிருந்தார் ஓட்டுனர் இருக்கும் வாடகை வாகத்தில் செல்லவேண்டுமென்று, ஆனால் இவ்வளவு தொலைவிற்கு அவ்வாறு செய்வது எனக்கு தயக்கமாக இருந்ததால் வாடகை வாகனத்தை நானே ஒட்டிக்கொண்டு செல்வதாக முடிவெடுத்தேன். என்னை தூண்டிய அந்த உள்ளுணர்விற்க்கு தான் நன்றிசொல்லவேண்டும் ஏன்னெனில் ஒரு நாட்டை பற்றி தெரிந்துகொள்ள சாலை பயணம் மிகமுக்கியமானது. போலந்துகாரர்கள்மேல் நான் வைத்திருந்த மற்றும் பிறரால் கூறப்பட்ட கதைகளின் பிம்பம் உடைய தொடங்கியது. ஒரு நாட்டவரை நல்லவர்கள் கெட்டவர்கள் என்கிற பிரிக்கிற பகுப்பே தவறானது. அருமையான சாலைகள், வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்க்கான அனைத்து கூறுகளும் நிரம்பிய கிழக்கு ஐரோப்பிய நாடு போலந்து.  இந்த நேரத்தில் இந்தியர்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் ஒரு எச்சரிக்கை இந்த நகரத்தில் புதிதாக நிறைய மென்பொருள் பூங்காக்களையும் பல வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகளையும் கண்டேன். இதன் பொருள் உங்கள் ஐரோப்பிய வேலைகளை நீங்கள் நீண்ட நாட்களுக்கு எதிர்பார்காதீர்கள் ஏனெனில் அருமையான உள்கட்டமைப்புகளை இவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் குறிப்பாக தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
   
              விமான நிலையத்திலிருந்து முதல் நாற்பது கிலோமீட்டர்கள் அதிவிரைவு சாலையிலும், மீதி தூரத்தை உட்புற கிராமப்புற சாலையிலும் கடந்தேன். 140 கிலோமீட்டர் வேகத்தில் அதிவிரைவு சாலையில் ஒட்டியது எனக்கும் என் பழைய துபாய் வாழ்வை நினைவுபடுத்தியது. குறிப்பாக நான் ஐரோப்பாவில் பொதுவாக பார்ப்பது வரப்புகள் இல்லாத பரந்த வயல்களை இதனால் தான் உழவு இயந்திரங்களை பயன்படுத்துவது எளிதாக இருப்பதாக நினைக்கிறன். எங்கள் நிறுவத்தின் ஆழ்கடல் துளையிடும் கப்பலிற்கான மூன்று பெரிய மின் தூக்கிகளை(Crane) மாற்ற  இருக்கிறோம் அதன் கட்டுமானங்கள் இந்த சிறிய கிராமத்தில் உள்ள மிகபெரிய நிறுவனத்தில் நடைபெறுகிறது, அந்த கட்டுமானங்களை ஆய்வு செய்யவே அங்கு சென்றேன். நினைத்துபாருங்கள் இப்படியான பெரிய கட்டுமானங்களை எடுத்து செல்ல கடற்கரை கப்பல் போக்குவரத்து வசதி இல்லாத சிறிய கிராமம்  அது 60 ஆண்டுகளாக 600 தொழிலாளர்களுக்கு வேலைகொடுத்து இயங்கிகொண்டிருகிறது. இவ்வளவு பெரிய கட்டுமானங்களை பகுதி பகுதியாக பிரித்து பெரிய வாகனத்தில் வெறும் 30 அடி அகலம் கொண்ட சாலையில் இரவு நேரங்களில் எடுத்து சென்று சிறிய கப்பல் போக்குவரத்துக்கு வசதி கொண்ட ஆற்றின் வழியாக கடலுக்கு கொண்டுசென்று அங்கிருந்து நார்வேக்கு அனுப்பி வைகிறார்கள். தமிழகத்தில் இத்தனை துறைமுகங்கள் இருந்தும் கப்பல் கட்டும் தொழிலோ, இப்படியான பெரிய எண்ணை எடுக்கும் கடல் மேடைகளை செய்யும் திறனுள்ள தொழில் நிறுவனகள் இல்லாதது பெறிய இழப்பு, ஏனெனில் சிங்கப்பூரில் தான் பல பெரிய ஆழ்கடல் துளையிடும் கப்பல்கள் கட்டப்படுகின்றன அதற்க்கு நோர்வே நிறுவனங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும், அதற்காக இவர்கள் தென் கொரிய நாட்டிக்கு சென்று அங்கு இந்த பெரிய கப்பல்களை கட்டுகிறார்கள். எப்படியான வேலைகளுக்கு இந்தியா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலும், அருமையான தொழிலாளர்கள் இருந்தும் நம்மால் செய்யமுடியவில்லை. செய்யவேண்டியவைகளை சரியான நேரத்தில் செய்திருந்தால் நாம் ஏன் வெளிநாடுகளில் அடிமை வாழ்வு வாழவேண்டும்?

            வேலை முடிந்து திரும்பும் வழியில் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களை அடுத்த பதிவில்.

                                                                                                                     பயணங்கள் நீளும்....

Sunday, August 5, 2012

உடல், பொருள், ஆவி - அடப்பாவி!

நம்மை ஐந்து முறை முட்டாள்களாக்கி எம்மினத்திற்கு தீராத துயரத்தை கொடுத்து சன்னதம் ஆடிய, இன்னும் ஏமாளிகள் ஆக்க நினைக்கும் ஒரு மகா நடிகனை பற்றியே இன்றைய பதிவு. மிக நெடிய தமிழர் வரலாற்றில் கருப்பு பக்கங்களை எழுதி தன்னை தானே தமிழின தலைவன் என்றும் கூறிகொண்ட மிக கீழ்மையானவர். தமிழர்கள் இன்று படும் அனைத்து துயரங்களுக்கும் அது காவிரி பிரச்சனையானாலும், மீனவர்கள் எதிர்கொள்ளும் கச்சதிவு பிரச்சனையிலும், எம் தொப்புள்கொடி சொந்தங்கள் ஈழத்தில் ஒரே நாளில் இனப்படுகொலை செய்யப்படதிலும் மூல காரணகர்த்தாக்களில் இவரும் ஒருவர்.

உலக சரித்திரத்தில் எத்தனையோ கொடிய மன்னர்கள், அரசியல்வாதிகளை கண்டும் படித்தும் இருக்கிறோம் அவர்களை விஞ்சிய பொய், வஞ்சகம்சூழ்ச்சி துரோகமே உருவானவர். தன் ஆட்சிக்காகவும், குடும்பத்திற்காகவும் மாபாதக செயல்கள் செய்து இன்று தள்ளாத வயதில் முகத்திரை கிழிந்து தொங்கும் தன் பேய் முகத்தை மறைக்க இன்றளவும் நாடகங்கள் தடத்தும் நரி. ஆனாலும் தமிழின் துணைகொண்டு இவர் உதிர்க்கும் வார்த்தைகளில் மயங்கியே அறிவிழந்தோம் நாம். ஒருமுறை "தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவது சகஜம்தானே" என்று தன் ஊழலை வார்த்தை ஜாலங்கள் கொண்டு நியாயப்படுத்தியவர்.

தமிழருவி மணியன் ஒருமுறை இவரை பற்றி இவ்வாறு கூறினர் "தான் ஒருவன் மட்டும் ஒழுக்க கேடாக நடவாமல் இவரை சுற்றி இருப்பவர்களையும் மாற்றுவது அதையும் கடந்து ஒட்டுமொத்த சமூகத்தையே பாழ்படுத்துவது" எடுத்துகாட்டாக செல்வம் கொழிக்கும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தை பெற்றுக்கொண்டு அதில் தன் கைப்பிள்ளை ராசாவை அமரவைத்து உலகிலேயே மிகபெரிய ஊழல் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலை செய்தவர். ஊரிலிருந்து ஒரு அழுக்கு பையுடன் இரயிலேரியவர் இன்று உலகப்பணக்காரர்கள் வரிசையில். 

இந்திராகாந்தி காலத்தில் தன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள கட்சத்தீவை தாரைவார்த்தது இன்றளவும் மீனவர் சாவதற்கு காரணம். ஒரு சரியான தருணத்தில் தமிழகத்திற்க்கு சாதகமாக தீர்ப்பு வரும் நேரத்தில் காவரி வழக்கை திரும்பபெற்று காவரி வறண்டு  போக காரணம். உச்சகட்டமாக ஊர் உடமை அத்தனையும் இழந்து உயிராவது காப்பாற்றப்படும் என்று போர்முனையில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை நாடகம் நடத்தி கொன்றது. போருக்கு பின் முள்வேலியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு காத்திரமாக எதுவும் செய்யாமல் "டெசோ" என்ற செத்துப்போன அமைப்பை கொண்டு இன்னும் இரத்தம் குடிக்க ஒரு ஓநாய் போல் கிளம்பி இருக்கிறார். இந்த நாடகம் இப்போது நிகழ்த்த காரணம் செய்த துரோகத்தை மறைக்கவும், வரபோகும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காகவுமே.

மத்திய ஆட்சியை நடத்துவதே இவர்கள்தான் பிறகு எதற்கு மாநாடு, கடிதம் எழுதுவது எல்லாமே ஏமாற்று வேலை. 1999 முதல் வாஜ்பாய் ஆட்சி, இரண்டு மன்மோகன் ஆட்சிக்காலங்கள் என்று தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டுகள் மத்தியில் மிக வலிமையாக ஆட்சி நடத்தி கொள்ளை அடித்துவிட்டு இன்று ஈழமக்களுக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் தருவேன் என்று கதையளக்கிறார், ஆடப்பாவி இப்போதாவது உன் வஞ்சகத்தை நிறுத்திக்கொள் உலகில் மானமுள்ள கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை தன் மண் மீட்கபோரடுவான்.

Monday, July 23, 2012

இதுவா கல்வி?


நேற்று ஒரு தொலைகாட்சியில் கல்விபற்றி விவாதம் காணக்கிடைத்ததுஒருபுறம் நாமக்கல்ராசிபுரம்திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள்ஆசிரியர்கள் மறுபுறம்
அந்த பள்ளிகளில் பயின்ற முன்னால் மாணவர்கள்அரசு மாற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்முதலில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெறுவது ஒன்று மட்டுமே குறிக்கோளாக இயங்கும் மேலே குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி ஆட்களிடம் அவர்களின் கல்வி முறைமை(Methodology) பற்றி கேள்விகள் தொடுக்கப்பட்டன அவர்களின் பதில்களை கேட்க கேட்க ஒரு அறிவார்ந்த சமுகத்தில் இருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறோம் என்று உரைத்தது.
                  1. பதினொன்றாம் வகுப்பு படத்தை வெறும் மூன்று மாதமே நடத்துவார்கள் பிறகு பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் தான். 2. அதிகாலை மூன்று மணி தொடங்கி இரவு பதினோரு வரை ஆசிரியர் கண்காணிப்பில் படிப்பு. 3. ஒரு பாடப்புத்தகத்தையே இரண்டாயிரம் மூவாயிரம் ஒரு-மதிப்பெண் கேள்விகளாக்கி படிக்கவைப்பது 4. மாணவர்களின் எண்ணத்தை ஒருமுகப்படுத்த வகுப்பில் ஒரு வட்டம் வரைந்து அதன் நடுவே ஒரு புள்ளி வைத்து ஊற்று நோக்கசெய்வது 5. பொது தேர்வுக்கு முன் நூற்று கணக்கான மாதிரி தேர்வுகளை எழுத செய்வதுஇவை அவர்கள் கூரியவைகளில் சில மட்டுமே இன்னும் அதிர்ச்சி தரக்கூடியவை நிறையவுண்டுகடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் பள்ளி கல்வி முடித்தவர்கள் அதிக மதிப்பெண் பெற இதில் என்ன தவறு இருக்கும் என்று எண்ணக்கூடும்.
                  ஆனால் இம்மாதிரி செயல் சமுக சமநிலையில் எவ்வளவு பெரிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறதுஇவ்வாறு படிப்பவனும் எங்கோ ஒரு கிராமத்தில்ஏன் அரசு பள்ளியில் நகரத்தில் ஏழ்மையில் பள்ளி செல்பவனும் ஒன்றாஇதை போன்ற முட்டாள் தனமான கவ்வி முறை வேறெங்கும் காணமுடியாதுமேனிலை பள்ளி அதாவது பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டம் என்பது கல்லூரிக்கு செல்லும் மாணவனின் அடிப்படை கல்விஅதில் இம்மாதிரி குறுக்கு புத்தியை பயன்படுத்தி வெற்றிகொள்வது அடுத்தவன் உணவை திருடி உண்பதற்கு சமம்இதில் கொடுமை என்னவெனில் இந்த பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பில் 900 அல்லது 1000 பேர் படிப்பார்கள்.
                  கல்வியின் பயன் ஒரு மாணவனை அறநெறிநல்லொழுக்கம் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்குவதாஇல்லை இப்படி பொருளாதாரத்தின் பயன்கொண்டு உருவாக்குவதாஇப்படி கல்வி கற்பவனுக்கு எவ்வாறு சிந்திக்கும் திறன் வரும்சுதந்திரத்திற்கு பின் நாம் எந்த அறிவியல் கண்டுபிடிப்பை செய்தோம்எவனோ கண்டுபிடித்த ஜாவாவிலும்ஆரகில் போன்ற மென்பொருளில் வேலை செய்துவிட்டு நாங்கள் வளர்ந்துவிட்டோம்வல்லரசு என்று நமக்கு நாமே செல்லிக்கொண்டு திரிகிறோம்.
                  சாராயம் விற்றவன் கல்வியையும் கல்விதரவேண்டிய அரசு சாராயத்தை விற்பதை எவன் கேள்விகேட்டான்இந்த கேள்விக்கெல்லாம் மூலம் எதன் அடிப்படையில் நம்மை ஆள்பவனை தெரிவு செய்கிறோம் என்பதிலிருந்தேகையேந்தி பணம்பெற்று மதிய உணவிட்டு கல்விகொடுத்த காமராசர் எங்கே இவர்கள் எங்கேஒரு கவிஞன் அழகாக சொன்னான்  நாங்கள் மாணவர்களை மருத்துவர்களாக பொறியாளர்களாக்கினோம் ஏனோ மனிதர்களாக்க மறந்துவிட்டோம்என்று இதுதான் இன்றைய கல்வியின் நிலை.

Friday, April 27, 2012

நானும் தமிழனே!

தமிழர்கள் தன்னகத்தே செழுமையான மொழியையும், உயரிய நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களாக விளங்கி வந்திருக்கிறோம். அந்த வகையில் நம்முடைய இலக்கியங்கள், நாம் கற்றுகொண்ட அறநெறிகள் யாவும் நம் வாழ்கையை செழுமைபடுத்தவே செய்திருக்கின்றன. நாம் எந்த ஒரு இனக்குழுவை விடவும் மிக வீரியம் மிக்கவர்களாக, செயல் நேர்த்தி உடையவர்களாக இருந்துவருகிறோம்.

இன்று காலை நோர்வேயின் ஒஸ்லோ மாநகரத்தில் மூன்றாவது தமிழ் திரைப்படவிழாவில் பங்கெடுப்பதற்காக நிலக்கீழ் ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். அதனுள் அனைத்து பெட்டிகளிலும் என்னை கவர்ந்த ஒரு விளம்பரம் அது ஐரோப்பா, ஆப்பிரிக்க, மற்றும் பல நாடுகளில் பறந்து விரிந்திற்கும் லிபரா எனும் தொலைதொடர்பு நிறுவனுத்துடையது.இதில் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த நிறுவனம் மூன்று தமிழர்களால் நிறுவப்பட்டது. லியோன், பாஸ்கரன், மற்றும் ரதீஸ் என்பவர்களே அவர்கள். நார்வேயில் உள்ள தமிழர்களே கூட அறியாத ஒரு செய்தி இது. 2001 ஆம் ஆண்டு இம்மூவரும் தங்கள் ஒரு பயணத்தின் போது உதித்த சிறு பொறியில் ஆரம்பிக்கபட்ட நிறுவனம் இன்று பல மில்லியன் டாலர் பெருமதி உடையதாக வளர்ந்து நிற்கிறது.
இவர்களைப்பற்றி மேலும் இணையத்தில் தேடியபோது லிபராவின் தலைமை நிர்வாகி திரு. ரதீசன் யோகநாதன்(படத்தில் மூன்றாவதாக இருப்பவர்) கூறுகிறார் ஒருவன் திறமையை கற்று கொள்ளலாம் அறிவை வளர்த்து கொள்ளலாம் ஆனால் உளப்பாங்கு(attitude) அதை யாராலும் கொடுக்கமுடியாது  மாறாக அவனுக்குள்ளாகவே இருக்கவேண்டும். இவர் தன்னுடைய 15 ஆவது வயதில் இங்கிலாந்திற்கு அகதியாக வந்து படித்து விமான பொறியியலில் பட்டம் பெற்றவர்.
இவர்கள் மூவரும் தன்னுடைய வருமானத்தின் பெரும் பகுதியை ஒரு அறகட்டளை அமைத்து சென்னைக்கு அருகில் ஆயிரம் ஈழ தமிழ் குழந்தைகளுக்கு கல்வியும் அவர்கள் குடும்பத்திற்கும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். நான் அறிந்த வரையிலும் பிற தமிழர்கள் ஐரோப்பாவில் இருந்து மேல்மருவத்தூரிலும் இன்ன பிற சாமியர்களிடமும் ஈரோக்களில் பணத்தை கொட்டும் போது இவர்கள் தான் பட்ட துன்பம் தன் இனம் பட கூடாது என்று செயல்படுவது போற்றுதலுக்குரியது.

Monday, May 23, 2011

தென்மேற்கு பருவக்காற்றில் உயிர்ப்புற்ற கிராமியம்


முதல் முதலில் தென்மேற்கு பருவகற்று எனும் இந்த கிராமத்து திரைஓவியத்தை காணும் வாய்ப்பு 2011 நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் கிடைத்தது. ஒஸ்லோ நகருக்கு விழாவிற்கு செல்லும் வரையிலும் நான் பார்க்க தெரிவு செய்த பட்டியலில் இந்த படம் இல்லை. ஏனெனில் இயக்குனருடைய ஏதோ ஒரு தொலைகாட்சி பேட்டியில் அவர் இந்த படத்தை பற்றி செருக்குடன் பேசுவது போல் இருந்ததால் இருக்கலாம். ஆனால் அவரை நேரில் கண்டு பேசி உணர்ந்த பின்பு நான் அவரை பற்றி கட்டிவைத்த தவறான பிம்பம் கரைய தொடங்கியது.
பொதுவாக தொழில் கற்பிக்கும் இயக்குனருடைய சாயல் உதவி இயக்குனர்களுக்கும் தொற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் இயக்குனருடைய ஆசான் திரு. பாலுமகேந்திராவின் எந்த சாயலும் இல்லாது இருப்பதில் இருந்தே திரைகலையை இவர் கற்று வைத்திருக்கும் விதம் புரிகிறது. இந்த படத்தின் தலைப்பு பாடலில் வரும் விதவிதமான உழைக்கும் தாய்களின் புகைப்படங்கள் மூலமாக பார்வையாளர்களை படத்தின் அடிநாதமான மைய்ய உணர்வுக்குள் உள்வாங்கிக் கொள்கிறார்.
பூகோள மற்றும் இயற்கை பாதிப்பால் தென்மேற்கு பருவக்காற்று ஒரு பக்கம் அனலாகவும் மறுபுறம் குளிர்ந்தும் விசுவதால் ஒருபுறம் செழிப்பாகவும் மறுபுறம் வரண்டும் இருப்பதால் அந்த பகுதியில் வாழும் பிரான்மலை கள்ளர் எனும் இன குழுவிற்கு திருட்டை தவிர வேறு தொழில் இல்லை என்கிற வரலாற்று ரீதியான தகவல்கள் மீது பல இயல்பான நகைசுவை காட்சிகளோடும் இனிமையான பாடல்களோடும் திரைகதை பயணிக்கிறது. இன்றைய கிராமத்தின் அதே இயல்போடு படமாக்க பட்டிருப்பது இந்த படத்தின் தனி சிறப்பு.
இயக்குனர் திரு சீனு ராமசாமியிடம் உரையாடி கொண்டிருக்கும் போது கதாநாயகனுக்கு நிச்சயிக்க பட்ட பெண்ணாக நடித்தவரை பற்றிய ஒரு செய்தியை சொன்னார். அந்த பெண் இந்த படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர், அவரை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து இருக்கிறார். இப்படி ஒரு நிறம் குறைந்த பெண்ணை நடிக்க வைப்பது தெரிந்தால் படபிடிப்பையே நிறுத்தி இருப்பார்கலாம், ஆனால் அந்த பெண்ணுக்கு சிறு வேடம் தான் என்று கூறி படப்பிடிப்பையே நடத்தி இருக்கிறார். இதை எல்லாம் தாண்டித்தான் இயக்குனர்கள் சாதிக்க வேண்டி உள்ளது.
இந்த படத்திற்கு தமிழின் சிறந்த படத்திற்கான தேசிய விருது ஏன் வழங்கப்பட்டது என்று யோசித்து பார்த்தல்,உணர்வு பூர்வமான விரசம் எதுவும் இல்லாத சிறந்த படைப்பு என்பதற்க்காகதான். தன் தாய் இறந்த பின் அவளின் சாம்பலை அவள் உழுது உழைத்த நிலத்தில் தூவுவது உணர்வுகளின் வெளிப்பாட்டின் உச்சம். இதை போன்ற படங்கள் வெளிவருவதையும் ஓடுவதையும் தடுத்த கொள்ளை கூட்டத்தை எதிர்க்க முடியாமல் கடந்த ஐந்து வருடமும் ஊமையின் பேச்சை போல தான் இருந்தது திரைவுலகம்.
வணிக படங்களில் கதாநாயகி ஓடும் போது மேலே ஏரியல் ஷாட் வைக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்த படத்தில் தென்மேற்கு பருவகாற்றல் ஏற்படும் புவியியல் மாற்றத்தை காட்ட ஏரியல் ஷாட் எடுக்க ஒரு ஹெலிகப்ட்டர் தேவை பட்டதாம் ஆனால் அதற்கு பொருளாதாரம் ஒத்துழைக்க வில்லை என்று தன் இயலாமையை இயக்குனர் என்னிடம் வெளிபடுத்திய போது எனக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.
படத்தின் பாடலசிரியர் வைரமுத்துவிற்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஒரு பாடலில் "சாமி நூறு சாமி இருக்குதே தாயி ரெண்டு தாயி இருக்குதா", "தங்கம் தனி தங்கம் மாசு இல்ல தாய்பால் ஒன்றில் மட்டும் தூசு இல்ல" என்கிற வரிகளுக்காகவே இன்னும் நூறு தேசிய விருதுகளை அவருக்கு வழங்கலாம்.
தாய்மையின் தூய்மையை எல்லை வரை காட்டிய இந்த தென்மேற்கு பருவக்காற்று வேப்பமரத்தடியில் கிடைக்கும் தூய தென்றல் காற்று.