முதல் முதலில் தென்மேற்கு பருவகற்று எனும் இந்த கிராமத்து திரைஓவியத்தை காணும் வாய்ப்பு 2011 நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் கிடைத்தது. ஒஸ்லோ நகருக்கு விழாவிற்கு செல்லும் வரையிலும் நான் பார்க்க தெரிவு செய்த பட்டியலில் இந்த படம் இல்லை. ஏனெனில் இயக்குனருடைய ஏதோ ஒரு தொலைகாட்சி பேட்டியில் அவர் இந்த படத்தை பற்றி செருக்குடன் பேசுவது போல் இருந்ததால் இருக்கலாம். ஆனால் அவரை நேரில் கண்டு பேசி உணர்ந்த பின்பு நான் அவரை பற்றி கட்டிவைத்த தவறான பிம்பம் கரைய தொடங்கியது.
பொதுவாக தொழில் கற்பிக்கும் இயக்குனருடைய சாயல் உதவி இயக்குனர்களுக்கும் தொற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் இயக்குனருடைய ஆசான் திரு. பாலுமகேந்திராவின் எந்த சாயலும் இல்லாது இருப்பதில் இருந்தே திரைகலையை இவர் கற்று வைத்திருக்கும் விதம் புரிகிறது. இந்த படத்தின் தலைப்பு பாடலில் வரும் விதவிதமான உழைக்கும் தாய்களின் புகைப்படங்கள் மூலமாக பார்வையாளர்களை படத்தின் அடிநாதமான மைய்ய உணர்வுக்குள் உள்வாங்கிக் கொள்கிறார்.
பூகோள மற்றும் இயற்கை பாதிப்பால் தென்மேற்கு பருவக்காற்று ஒரு பக்கம் அனலாகவும் மறுபுறம் குளிர்ந்தும் விசுவதால் ஒருபுறம் செழிப்பாகவும் மறுபுறம் வரண்டும் இருப்பதால் அந்த பகுதியில் வாழும் பிரான்மலை கள்ளர் எனும் இன குழுவிற்கு திருட்டை தவிர வேறு தொழில் இல்லை என்கிற வரலாற்று ரீதியான தகவல்கள் மீது பல இயல்பான நகைசுவை காட்சிகளோடும் இனிமையான பாடல்களோடும் திரைகதை பயணிக்கிறது. இன்றைய கிராமத்தின் அதே இயல்போடு படமாக்க பட்டிருப்பது இந்த படத்தின் தனி சிறப்பு.
இயக்குனர் திரு சீனு ராமசாமியிடம் உரையாடி கொண்டிருக்கும் போது கதாநாயகனுக்கு நிச்சயிக்க பட்ட பெண்ணாக நடித்தவரை பற்றிய ஒரு செய்தியை சொன்னார். அந்த பெண் இந்த படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர், அவரை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து இருக்கிறார். இப்படி ஒரு நிறம் குறைந்த பெண்ணை நடிக்க வைப்பது தெரிந்தால் படபிடிப்பையே நிறுத்தி இருப்பார்கலாம், ஆனால் அந்த பெண்ணுக்கு சிறு வேடம் தான் என்று கூறி படப்பிடிப்பையே நடத்தி இருக்கிறார். இதை எல்லாம் தாண்டித்தான் இயக்குனர்கள் சாதிக்க வேண்டி உள்ளது.
இந்த படத்திற்கு தமிழின் சிறந்த படத்திற்கான தேசிய விருது ஏன் வழங்கப்பட்டது என்று யோசித்து பார்த்தல்,உணர்வு பூர்வமான விரசம் எதுவும் இல்லாத சிறந்த படைப்பு என்பதற்க்காகதான். தன் தாய் இறந்த பின் அவளின் சாம்பலை அவள் உழுது உழைத்த நிலத்தில் தூவுவது உணர்வுகளின் வெளிப்பாட்டின் உச்சம். இதை போன்ற படங்கள் வெளிவருவதையும் ஓடுவதையும் தடுத்த கொள்ளை கூட்டத்தை எதிர்க்க முடியாமல் கடந்த ஐந்து வருடமும் ஊமையின் பேச்சை போல தான் இருந்தது திரைவுலகம்.
வணிக படங்களில் கதாநாயகி ஓடும் போது மேலே ஏரியல் ஷாட் வைக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்த படத்தில் தென்மேற்கு பருவகாற்றல் ஏற்படும் புவியியல் மாற்றத்தை காட்ட ஏரியல் ஷாட் எடுக்க ஒரு ஹெலிகப்ட்டர் தேவை பட்டதாம் ஆனால் அதற்கு பொருளாதாரம் ஒத்துழைக்க வில்லை என்று தன் இயலாமையை இயக்குனர் என்னிடம் வெளிபடுத்திய போது எனக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.
படத்தின் பாடலசிரியர் வைரமுத்துவிற்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஒரு பாடலில் "சாமி நூறு சாமி இருக்குதே தாயி ரெண்டு தாயி இருக்குதா", "தங்கம் தனி தங்கம் மாசு இல்ல தாய்பால் ஒன்றில் மட்டும் தூசு இல்ல" என்கிற வரிகளுக்காகவே இன்னும் நூறு தேசிய விருதுகளை அவருக்கு வழங்கலாம்.
தாய்மையின் தூய்மையை எல்லை வரை காட்டிய இந்த தென்மேற்கு பருவக்காற்று வேப்பமரத்தடியில் கிடைக்கும் தூய தென்றல் காற்று.